பத்துத்தொகுதிகள் - சிறு அறிமுகம்

சைவ சமயம் - தமிழகம்
சைவ சமயம் - உலகம்
சைவத் திருமுறைகள்
திருமுறைத் தலங்கள்
பிற்காலத் தலங்கள்
சைவ சமய அருளாளர்கள்
சைவ சமய அருள் நூல்கள்
சைவ சித்தாந்தம்
சைவ சமய அமைப்புகள்
தோரண வாயில்
பத்துத்தொகுதிகள் - சிறு அறிமுகம் - 1சைவ சமயம் - தமிழகம்:
சைவ சமயம் - தமிழகம் என்ற முதல் தொகுதியில் தமிழ் நாட்டில் நிலவும் 2750 ஆண்டுக்கால சைவ சமயம் குறித்த அனைத்துச் செய்திகளும் 900 பக்கங்களில் தொகுத்தளிக்கப் பெற்றுள்ளது . சிறியனவும்,பெரியனவுமாக ஏறத்தாழ 5100 தகவல்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன . ஆறு ஆண்டுக்காலம் 50 அறிஞர்களின் முயற்சி வெளிப்பாடு இம் முதல் தொகுதி .

சைவ சமயம் - உலகம்

சைவ சமயம் உலகம் என்பது இரண்டவது தொகுதி . தமிழகம் அல்லாத ஏனைய இந்திய மாநிலங்களில் உள்ள சிறப்புமிக்க 250 பிரசித்தி பெற்ற ஆலயங்கள் வண்ணப் படங்களுடன் இத்தொகுப்பில் இணைக்கப் பெற்றுள்ளன. இந்திய மொழிகளில் சிறந்திலங்கும் சைவ இலக்கியங்கள், பல்வேறு இந்தியத் தத்துவ ஆய்வுகள், அமைப்புகள் யாவும் பெரிது முயன்று இத்தொகுப்பில் இணைக்கப் பெற்றன. இந்தியாவிற்கு வெளியே சைவம் செழித்து வளர்ந்த நாடுகள் ஈழத் திருநாடு விரிவாக 300 பதிவுகளுடன் அடையாளப்படுத்தப் பட்டுள்ளது. கீழை மேலைநாடுகளில் சைவத்தின் பரப்புப் பற்றி 8 கட்டுரைகள் 175 பக்கங்களுக்கு இணைக்கப் பெற்றுள்ளன. இந்தியா, இலங்கை அல்லாத உலகின் பலநாடுகளில் 200 ஆண்டுகளில் கட்டப்பெற்ற 175 கோயில்கள் பற்றிய விபரம் நிறைவில் தரப்பெற்றுள்ளது. ஆசிரியர் குழுவினர்க்கு இத்தொகுப்பு பெரும் சவாலாகவே அமைந்தது.


சைவத் திருமுறைகள்

தமிழ்ச் சைவர்களின் வேத நூல்கள் என்று கருதப்படும் 27 அருளாளர்களால் பாடப்பெற்ற 12 திருமுறைகள் பற்றிய மிக விரிவான துல்லியமான நுண்ணாய்வாக இத்தொப்பு சைவத் திருமுறைகள் என்ற தலைப்பில் மூன்றாவதாக அமைகிறது.

திருமுறைத் தலங்கள்

திருமுறைத் தலங்கள் என்ற நான்காம் தொகுதியில், 12 திருமுறைகளும் பாடப்பெற்ற 476 தலங்கள் பற்றிய மிக விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப் பெற்றுள்ளன. தமிழகத்துப் புனிதத் தல யாத்திரை மேற்கொள்ள விழைவார்க்கு இத்தொப்பு ஒரு கைவிளக்கு . ஒவ்வொரு தலம் பற்றியும் 24 பகுப்புகளில் தகவல்கள் திரட்டி வழங்கப் பெற்றுள்ளன


பிற்காலத் தலங்கள்

பிற்காலத் தலங்கள் என்ற 5 ஆவது தொகுதியில் 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோற்றம் கொண்ட 2500 சிவத்தலங்கள், 1500 முருகன் ஆலயங்கள் மற்றும் சந்நிதிகள், 108 சிவசக்தி பீடங்கள் மற்றும் சிறப்பு மூர்த்தங்கள் , சில விநாயகர் கோயில்கள், சிவசக்தி அம்சமான 999 நாட்டுப்புறத் தெய்வங்களின் வாழிடங்கள் முதலியன அரிது முயன்று பதிவு செய்யப் பெற்றுள்ளன.


சைவ சமய அருளாளர்கள்

சைவ சமய அருளாளர்கள் என்ற ஐந்தாவது தொகுப்பில், அகத்தியர் தொடங்கி இன்று நம்மோடு வாழ்ந்து வரும் சிவஞானச் செல்வர்கள் வரை 710 அருளாளர்களின் மிக விரிவான அருள் வரலாறு நுட்பமாக ஆய்வு செய்து பதிவு செய்யப் பெற்றுள்ளது. சேக்கிழாரின் பெரியபுராணம் போல், மேலும் பத்துப் பெரியபுராணங்கள் பாடப் பெரிதும் தகுதி படைத்த அன்னார் வரலாறுகள் மெய்சிலிர்க்க வைப்பன. மேலும் பின்னிணைப்பில், 300 வாழ்ந்து மறைந்த, தமிழக ஞானியரின் நினைவாலயங்கள் (ஜீவ சமாதிகள்) பற்றிய தகவல்கள் திரட்டிப் பதிவு செய்யப் பெற்றுள்ளன.

சைவ சமய அருள் நூல்கள்
2,615 பல்துறைச் சைவ நூலாசிரியர்களால் பாடப்பெற்ற, சைவ சமயம் குறித்த, 10 ஆயிரம் நூல்களின் பிரமாண்டமான முதல் பதிவாகக் களஞ்சியத்தின் 7 ஆவது தொகுதி, சைவ சமய அருள் நூல்கள் என்ற தலைப்பில் தொகுத்து வடிவமைக்கப் பட்டுள்ளது. பின்னிணைப்பாகச் "சைவ அருள் நூல் - பனுவல் திரட்டு", என்ற தலைப்பில் 45 சைவ அருள் நூல்களிலிருந்து, 2250 பாடல்கள் தொகுத்து இணைக்கப் பெற்றுள்ளன. மேலும் 220 தனிப் பாடல்களும், பொருள் விளக்கங்களும் இத்தொகுப்பில் செவ்வகக் கட்டங்களில் அழகுறப் பதிவு செய்யப் பெற்றுள்ளன.

சைவ சித்தாந்தம்

சைவ சமயக் கலைக்களஞ்சியத்தின் எட்டாவது தொகுதி, சைவ சித்தாந்தம் என்பது, சங்கரரின் அத்வைதம், ராமநுசரின் விசிட்டாத்வைதம், மாத்வரின் துவைதம் போல், தமிழகச் சைவத் தத்துவக் கோட்பாடாகிய சைவ சித்தாந்தம், மெய்கண்டாரால் 13 ஆம் நூற்றாண்டில் வரையறுக்கப் பெற்றது. உலகின் மிக உன்னதமான, அறிவாராய்ச்சிக்கு உட்படுதக்கூடிய, அரிய சமயத் தத்துவக்கோட்பாடு என விவேகானந்தரால் போற்றப்பெற்ற சைவ சித்தாந்தம் பற்றிய, மிக விரிவான, மிகத் துல்லியமான முதற்பதிவு இத்தொகுப்பு. 100 சைவ சித்தாந்த அருளாளர்கள், 150 அறிஞர்கள், 700 நூல்கள், 300 உரைகளின் மாபெரும் ஆய்வாக இத்தொகுதி அமைந்துள்ளது. பின்னிணைப்பில் அருஞ்சொல் அகராதியும், அட்டவணைகளும், விளக்கப்படங்களும் இணைக்கப் பெற்றுள்ளன.


சைவ சமய அமைப்புகள்

சைவ சமய அமைப்புகள் என்பது ஒன்பதாவது தொகுதி. இதில் கி.பி 1500க்குப் பின் சைவ சமயம் தமிழகத்தில் பெற்ற பெருவளர்ச்சிப் பற்றிய விரிவான 940 பதிவுகள் இடம் பெற்றுள்ளன. சைவ சமயம் வளர்த்த பதினெண் சைவ சித்தாந்த ஆதினங்கள், வீர சைவத்திருமடங்கள், கௌமார மடாலயங்கள், பிற மடங்கள், சைவ சமயவளர்ச்சி நோக்கில் தோற்றம் கொண்ட 220 அமைப்புகள், பண்ணிசை வளர்த்த 225 ஓதுவாமூர்த்திகள், சைவ இதழ்கள், சைவம் வளர்த்த சில செல்வர்கள், அன்னார் குடும்பங்கள், சைவ அறிஞர்கள் 400 பேர், மற்றும் சைவத் தொண்டர்களின் மாபெரும் வரலாற்றுப் பதிவு இத்தொகுதி.


தோரணவாயில்

தோரணவாயில் என்பது மேற்குறித்த ஒன்பது தொகுதிகளிலும் இடம் பெற்ற, ஏறத்தாழ 50 ஆயிரம் சைவ சமயப் பெருமிதம் குறித்த செய்திகளின் அகர வரிசைத் தொகுப்பாகும். குறிப்பிட்ட ஒரு செய்தி, எந்த ஒரு தொகுதியில், அல்லது எந்த எந்தத் தொகுதிகளில், இன்ன பக்கத்தில் உள்ளது என்பதைக் கண்டறிவதற்கென்றே இத்தொகுதி வடிவமைக்கப்பட்டது. மேலும், நிகழ்கால சைவ அறிஞர்கள் நூற்றுவர் வழங்கிய வாழ்த்துச் செய்திகள் மற்றும் பல இடம் பெறச் செய்யப் பெற்றுள்ளன.Copyright © Saivam 2013 .All rights reserved